search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரமாண்ட பொதுக்கூட்டம்"

    காந்திநகரில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு அகமதாபாத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். #AmitShah #LokSabhaElections2019
    அகமதாபாத்:

    பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், அமித் ஷா இன்று வேட்பு மனு தாக்கலுக்கு தயாரானார். இதற்காக இன்று காலை அகமதாபாத் வந்து சேர்ந்த அவர், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரது செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



    இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அமித் ஷாவின் வேட்பு மனு தாக்கல் கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும், மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்றும் மாநில பாஜக கருதுகிறது.

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.  #AmitShah #LokSabhaElections2019

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் பொதுக்கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். #MamataBanerjee #Megarally
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  

    இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.



    நேற்றே பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்து சேர்ந்தனர். அவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இன்று காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

    தலைவர்கள் பேசுவதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #MamataBanerjee  #Megarally
    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் ஐதராபாத் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #TelanganaAssembly #ChandrasekharRao
    நகரி:

    ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவரான சந்திரசேகர் ராவ் முதல்-மந்திரியானார்.

    அங்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் மாநிலத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இதில் இறுதி முடிவு எடுக்கவில்லை என மந்திரி கே.டி.ராமராவ் நேற்று முன்தினம் கூறினார்.

    இந்த நிலையில் கடந்த 4½ ஆண்டு ஆட்சியில் மாநில அரசு மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செய்து வரும் நலப்பணிகள் உள்ளிட்ட நிலவர அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் டி.ஆர்.எஸ். கட்சி நடத்துகிறது.

    ‘பிரகதி நிவேதன சபா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டம் ஐதராபாத் அருகே உள்ள கொங்கர கலான் பகுதியில் நடக்கிறது. இதற்காக அனைத்து வசதிகளுடன் 6 ஆயிரம் ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆளுங்கட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் ஏராளமானோர் நேற்றே ஐதராபாத்தை நோக்கி புறப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 1000 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் குறித்து முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் அறிவிப்பு வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக அவரது தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  #TelanganaAssembly #ChandrasekharRao
     #Tamilnews 
    உத்தரபிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். #NarendraModi #UttarPradesh
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ஆன்மிகவாதியும், கவிஞருமான கபீர், அங்குள்ள சந்த் கபீர் நகர் மாவட்டத்தின் மெகர் நகரில் உயிர்நீத்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட கபீரின் நினைவாக கோவில் ஒன்றை இந்துக்களும், நினைவிடம் ஒன்றை முஸ்லிம்களும் மெகர் நகரில் நிறுவியுள்ளனர்.

    இந்த நகர் முழுவதையும் சுற்றுலா தலமாக மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கபீரின் போதனை விளக்க மையம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மிகப்பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கபீரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மெகர் நகருக்கு செல்கிறார். அங்கு கபீரின் நினைவிடம் மற்றும் தர்காவில் மரியாதை செலுத்தும் அவர், பின்னர் அங்கு ரூ.2½ கோடியில் கட்டப்படும் கபீர் அகாடமிக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.



    மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று செய்து வருகிறார். இந்த கூட்டத்தில் 2½ லட்சம் பேரை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவே பா.ஜனதாவினர் கருதுகின்றனர். நெசவாளர்களின் ஆதரவை பெறும் நோக்கில், நெசவுத்தொழிலை செய்து வந்த கபீரின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி செல்வதாக கூறும் அவர்கள், சுவாமி ராமானந்தாவின் சீடராக கபீர் கருதப்படுவதால், வைஷ்ணவ பக்தர்களின் ஆதரவையும் இதன் மூலம் பெற முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கும் நிலையில், பிரதமரின் மெகர் நகர பொதுக்கூட்டம் பா.ஜனதாவினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் காலை 10 மணிக்கு கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மெகர் நகருக்கு செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் மெகர் நகர் முழுவதையும் சிறப்பு கமாண்டோ படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இதற்காக அருகில் உள்ள இந்தியா-நேபாள எல்லைப்பகுதி மூடப்பட்டு உள்ளதுடன், உளவுத்துறையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் மத்திய பாதுகாப்பு படை, மாநில போலீசார் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டால் கோரக்பூரில் இருந்து மெகருக்கு காரில் செல்ல நேரிடும். எனவே இதற்காக 30 கி.மீ. தொலைவுக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.  #NarendraModi #UttarPradesh  #Tamilnews
    ×